ரமலான் 21

ஓர் இலையின் மெல்லிய உதிர்வு போல்
மரணம் நிகழ்ந்துவிடுகிறது
உதிர்ந்த மலர்களை
இரசிக்கும் முன் கூட்டித் தள்ளாதீர்கள்
பயணம் சிறியதென்றாலும்
வாசம் மிகைத்தது
எதைத் தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்?
வீடு பெரியதென்றாலும்
வாசற்கதவு சிறிய அளவில்தான் இருக்கிறது.
ஆசைகளை வீட்டில் வைத்துவிட்டு
சாவியை நம்புவது எதற்காக?
நம்பிக்கை சிறியதாக இருந்தாலும்
ஈமான் நிச்சயம் இருக்க வேண்டும்
எறும்புகள்
யாரைக்கேட்டு உணவு எடுத்துச் செல்லும்?
அதன் சேமிப்பு கிடங்கைவிடவா
நமது வீடு மிகப் பெரியது?
பாம்பின் உணவு தேரையென்றால்
தேரையின் உணவும் பூச்சிகளாகத்தான் இருக்கிறது
குளிப்பதற்கே
காகத்திடம்தான் கல்வி கற்றவர்கள் நாம்...
புத்தகங்களை
இறைவன் பக்கத்தில் வைத்திருக்கிறான்....
படிக்காதது யார் குற்றம்?
தேவைக்கு மீறி விலங்குகள் சேமிப்பதில்லை
அவற்றிற்குத் தெரியும்
கொண்டு போகப்போவது எதுவுமேயில்லை.
அரசாங்கத்தின் வரியை அதிர்ந்து கட்டும் நாம்
ஏழைகளின் வரியை( ஜக்காத்)
அலட்சியமாக விட்டுவிடுகிறோம்.
தவறு செய்தால் அரசு மட்டுமல்ல
ஆண்டவனும் கூடக் கணக்கு கேட்பான்.
அவனிடத்தில் யாரும் ஏமாற்ற முடியாது
மரணம்
எப்போது வருமென்று யாருக்குத் தெரியும்
ஜக்காத்தை மனமுவந்து கொடுத்து விடுங்கள்
ஏழைகளின் கைகள்
இன்னமும் ஏந்தியபடியே இருக்கின்றன.
- மு.முகமது பாட்சா*
06 /06 /2018
No comments:
Post a Comment