
துப்பாக்கியைப் பற்றிக் கவிதையெழுதியவன்
துப்பாக்கியால் இறந்து கிடந்தான்
துப்பாக்கிகள் எப்போதுமே
தீவிரவாதிகளை மட்டும்தான் சுடுகிறது...
இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை
163428
வேண்டுமென்றால் எண்ணிக் கொள்ளுங்கள்
தயாரித்த ரவைகளின் எண்ணிக்கையே அவ்வளவுதான்
மக்களை மட்டும் காணவில்லை
ஆதார் அட்டைகள்
தெருவெங்கும் சிதறிக் கிடக்கின்றன
புல்லட் ஃபுரூப் ஆடைகளை
அமேசானில் பதிவிறக்கி வாங்கிக் கொள்ளலாம்
சுடப்பட்டவர்கள் தீவிரவாதிகள்தான்
நடிகரின் வாக்கு மூலம் போதும்
மக்கள்
இப்போதுதான் நிம்மதியாக உறங்குகிறார்கள்
ஹிட்லர் சுட்டதும் கூடத் தீவிரவாதிகளைத்தான்
இல்லையென்றால்
அவர்கள் ஹிட்லரையே சுட்டிருப்பார்கள்
எத்தனை பயங்கரம்!
மக்கள் எங்கே என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்
அவர்கள் அரசாங்க பாதுகாப்பில்
பத்திரமாகவே இருக்கிறார்கள் அமைச்சர்களாக
மக்களுக்கே தெரியும் சுடப்பட்டவர்கள்
நிச்சயம் தீவிரவாதிகள்தானென்று
- மு.முகமது பாட்சா*
05 /06 /2018
No comments:
Post a Comment