
மூடியிருந்த கதவைத் திறந்து அவள் வந்தாள்
தட்டி விட்டு வர வேண்டும் என்று அவளுக்கு
ஏனோ தோன்றவில்லை.
போன ஜென்மத்து சொந்தம் என்பதாலோ
இனி வரும் ஜென்மத்திலும் உறவு என்பதாலோ
ஒரு கண் பிடி அளவு புன்னகையை
ஒரு காது பிடி அளவு வளையொலியை
என் நாசி பிடி அளவு ரோஜா வாசத்தைத்
தூவி விட்டு
எதிரில் அமர்கிறாள்
பேச ஒன்றுமில்லை இருவருக்கும்
ஏனெனில்
எங்களுக்குள் அறிமுகம் இல்லை இப்பிறவியில்
மேசையிலிருந்த தாளிலெழுதப் பட்டிருந்த
என் கவிதையில் ஒரு சில
வரிகளை மட்டும் எடுத்து தன் உள்ளாடைக்குள் போட்டுக் கொண்டாள்
இன்னும் மணமும் சூடும் கூடியிருக்கும்
அந்த சில வரிகளுக்கு.
பெயர் கேட்க நினைத்தேன்
ஏன் கேட்க வேண்டும்
அழகின் பெயரை யாராவது கேட்பார்களா?
எவ்வளவு நேரம் மெளனிப்பது.
எந்த ஊர் என கேட்க நினைத்தேன்
காற்றுக்கெல்லாம் ஊர் இருக்கிறதா?
என்ன வேண்டும் எனக் கேட்கலாம்
பூரணமான அவளிடம் எல்லாம் இருந்தது.
திடீரென எழுந்தவள் என்ன தோன்றியதோ
என் விரலைப் பற்றி முத்தமிட்டவள்
இதை உன் தாயிடம் சேர்த்து விடு என்று
கதவைச் சாத்திவிட்டு போய் விட்டாள்
மிச்சமிருந்த கவிதை வரிகளை முகர்ந்தேன்
அதில் அவள் வாசம்
இப்போது
வீட்டுக்குள்ளே அவள்
வீட்டுக்கு வெளியே நான்.
கவிஞர் ஜெயதேவன்
No comments:
Post a Comment