Thursday, 11 January 2018

பொங்கல் கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

பொங்கலுக்காகத்தான்
கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருந்தேன்,

புத்தரிசி, புது நெல்லென்று
எழுதும் போதே
செத்துப்போன என் உழவனும்
சவளைப் பயிர்களும்
எழுதாதேயென்று 
சொல்லிவிட்டு போகிறார்கள்,

புதுக் கரும்பும், மஞ்சள் கிழங்கும்
செல்லாக்காசால்
செல்லரித்துப் போனதை
எப்படிதான் எழுதுவது ?

புத்தாடை என்றெழுதினால்
வெட்டரிவாள் 
கொண்டு வருவார்கள் பிள்ளைகள்.

புதுப் பானை, 
புத்தடுப்பு விற்காமல்
உட்கார்ந்திருக்கிறான் மண் பாண்டகன்.

மழை மேகம் மறைக்காமலிருந்தால்
சூரியன் மட்டும் வெளி வருவான்,
வாசலின் கோலங்களை 
பார்த்து, ரசித்து விட்டுப் போக.

வேறு யாருக்குத்தான் ..
வாழ்த்துகள் சொல்வது...

பொங்கி வழியும் வறுமைகளை
பொங்கிப்  பொங்கல் செய்யும் நரிகளுக்கா
பொங்கல் வாழ்த்துகள் ?

- மு.முகமது பாட்சா*
11/01/2017 மீள்

No comments:

Post a Comment

Popular Posts