
நம்பிக்கைகளில்
என்னைத் தேடியெடுக்கிறேன்,
நட்சத்திரங்கள், என்னை
திரும்பி பார்த்துவிட்டுப் போகின்றன,
தூக்கியெறிந்தால்
சிறகுகளசைத்து
பறக்க கற்றுக் கொண்டேன்,
துரோகிகள்
வீசியெறிகின்ற வசவுகளை
வடிவங்களாக மாற்றுவது
எனக்கொன்றும் கஷ்டமில்லை ,
போராட்டத்தின் முதல் நிலையை
பறவைகள்தான்
எனக்கு கற்றுக்கொடுத்தன,
நிழல்களை மிதிக்கக் கற்றவனுக்கு
கவலைகள் கூடக் கடந்து போகின்றது ,
நம்பிக்கையாளர்கள்
நடந்து கொண்டேதான் இருக்கிறார்கள்,
அவர்களுக்குத்தான் தெரியும்
உட்கார்ந்தால்,
முற்றுப் புள்ளிகள் கூட
முதுகிலேறி அமர்ந்து கொள்ளும்,
எழுத்துகளின் தோளுரசி நடக்கிறேன்,
அவற்றோடுவே
பேசிக் கொண்டும் திரிகிறேன்,
மௌனங்களை, மௌனங்களாக்கி
உறங்கவைக்கும் வித்துவம்
அவற்றுக்கு நன்றாகவே தெரியும்,
நம்பிக்கையைப் பற்றி எழுதச் சொன்னதும்
என் எழுத்துகள்தான் ,
'இதுவும் கடந்து போகும்' என்று
சொல்லிவிட்டுக் கடந்து போவதில்
எங்களிருவருக்குமே உடன் பாடில்லை,
எப்படிக் கடந்தோமென்று
ஆய்வுசெய்தபின் கடப்பதில்தான்
வாழ்க்கையிருப்பதாகவே நினைக்கிறோம் !
- மு.முகமது பாட்சா*
01/01/2018 (1)
No comments:
Post a Comment