Wednesday, 10 January 2018

நானும் காகமும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன 
ஒவ்வொருவரும் 
கூடைகளில் அள்ளிச் செல்கிறார்கள் 
நான் இன்னமும் வரிசையில்தான் நிற்கிறேன் 
கூடவே ஒரு காகமும் நிற்கிறது 
இரையில்லாத போது 
எழுத்துகளைப் பசியாறுவது பழக்கமாக இருக்கலாம் 
எனக்கும் கூட அப்படித்தான் 
வார்த்தைகளை அவ்வப்போது நெய்து 
அதற்குள் பதுங்கிக் கொள்கிறேன் 
வார்த்தைகளைச் சேகரித்த ஒருவன் 
எரித்துக் கொண்டிருந்தான் 
அதனில் குளிர் காய்வது அவன் வழக்கமாம், 
வார்த்தைகளைத் 
துப்பிக் கொண்டிருந்தவனின் எச்சிலில் 
புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன, 
வடிவமாக்கிய ஒருவன் 
அவற்றைப் புணர்ந்து கொண்டிருந்தான்... 
ஆடை அவனை விட்டு நழுவி சிரித்துக் கொண்டிருந்தது, 
இரத்தம் சிந்திய வார்த்தைகளை 
மண்ணில் புதைத்தும் கொண்டும் இருந்தார்கள்... 
நிறைய வார்த்தைகளை உற்பத்தி செய்யும் என்பது 
அவர்களின் நம்பிக்கை.. 
வார்த்தைகளே வேண்டாமென்றவன் 
மௌனமாகக் களவாடிவிட்டுச் செல்கிறான், 
நானும் காகமும் மட்டும் மிஞ்சி நிற்கிறோம் 
வார்த்தைகளேதும் கிடைக்காமல். 

- மு.முகமது பாட்சா*
10/01/2018 (16) 

No comments:

Post a Comment

Popular Posts