
இவன் இப்படித்தானென்று
எழுதி வைத்த எண்ணங்களை
சுட்டுப் பொசுக்கி விடு,
அதன் சாம்பல் கங்குகளை
நதி நீரில் கரைத்துவிட்டு,
குடி நீராய்ப் பருகிப் பார்...
இலையுதிர் காலத்தில் உதிர்ந்தது
சில வார்த்தைகள்தான்.
துளிர்க்கப் போகிறேன் என்பதை
நீ அறிய வேண்டாமா?
கனவுகளென்பது
கனவுகளாகவே இருக்கட்டும்,
கவிதைகள் , எல்லா நேரங்களிலும்
பொய் பேசுவது கிடையாது .
உதிர்ந்து போன முத்தங்களையெடுத்து
ஒட்டவைத்துக் கொண்டே
'இது காதலில்லை 'என்கிறோம்.
ஆன்மாவின்
மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டு
இறங்க மறுக்கும் உன்னை
எப்படி நான் விரட்டியடிப்பது?
குதிரைகளில் பயணம் செய்து கொண்டே,
நடந்து கொண்டிருப்பதாக
நாடகம் ஆடுகின்றோம்.
புழுதிகளின் தூசிகளைத் துடைத்து விட்டுப் பார்
உன் கண்ணாடியில்
என் முகபிம்பம் தெரியும் .
உடைத்துவிட்டால்
சிதறும், சிதறல்களின் பிம்பங்களாய்
பெருகி நின்று நான் ரசிப்பேன்.
முற்றுப் பெறாத
வார்த்தைகளை வைத்துக் கொண்டு
முடிவுரையெழுத முயற்சிக்காதே,
காற்புள்ளிகளென்பதே
அடுத்து நாம் தொடர்வதற்காகத்தான் !
- மு.முகமது பாட்சா*
08/01/2017 (மீள்)
No comments:
Post a Comment