
பிறந்த நாட்களின் மீதுதான்
இறந்த நாட்களும்
உட்கார்ந்திருக்கின்றன,
வாழ்ந்த நாட்களை
எட்டிப் பார்க்காமல்
வாழும் நாட்களுக்குள்,
நுழைந்து கொள்கிறோம் ,
பாடம் படித்த நாட்கள்தானே,
பக்குவத்தைக்
கற்றுக் கொடுக்கின்றன,
காலக் குதிரையை
பின்னோக்கி ஓட்டுங்கள்...
எழுந்த நாட்களை விட
விழுந்த நாட்கள்தான்
கணக்கில் அதிகம் தெரியும்,
நண்பர்களின் முகங்களை விட
துரோகத்தின் முகங்கள்தான்
முன்னால் நிற்கும்,
விரோதிகளின் கைகளைவிட
துரோகிகளின் கைகளில்தான்
கரையான் புற்றுகள்
பாம்புகளோடு குடியிருக்கும்,
காதல் படிமங்களெல்லாம்
காமத்தில் கரைந்ததும்,
கணக்கில் வரவு காட்டும்,
சோகத்தில் சூம்பிக் கிடந்த நாட்களை,
காலத்தின் விரயமென்று
யார்தான் கணக்கிட்டு சொல்வது?
பிறந்த நாட்களின் கூடவே
இறந்த நாட்களையும் இனிமேல்
தட்டியெழுப்பி அழைத்துச் செல்வோம்,
வாழ்கின்ற நாட்களுக்கு
அவைதான் நிச்சயம் வழி காட்டும் !
- மு.முகமது பாட்சா*
02/01/2018 (2)
No comments:
Post a Comment