Saturday, 13 January 2018

தளிமத் தாபம்



கடலினாழத்திலோடுகின்ற 
இரத்த நாளங்களின் திசுக்களில் 
ஒட்டியுறவாடும் அட்டைப் பூச்சிகளின் 
ஆழ்மனத் தியான வெளியில் 
மிளகின் காரமாய்ச் சற்றே காமம் , 
அலைகளில் பிரளயத்தில் 
ஆடைகளைக் களைகிறது உருவிய வாளின் 
அந்தகார வீச்சில் 
உருண்டோடிடும் வெட்கத்தின் தலை 
மோகிப்பின் முழுத் திரளாய் 
திமிங்கிலங்கள் மேலெழுகின்றன, 
பெரும் மூச்சின் வாசனையை 
அம்பராய் பூசிக் கொள்கிறது பெரும் திடல், 
சிற்றுயிரிகள் ஆழத்தில் நெளிய 
சீறிய எரிப் பிழம்பின் 
வாசம் பூசியக் கடற்குதிரைகள் 
பயணிக்கின்றன இலக்குகள் தெரியாமல், 
பவழப் பாறையின் தளிமக் கூறுகள் 
இடம் மாறி நிறம் கூட்டும் வேளையில் 
இதழ் திறந்த சிப்பியின் தெளிநீர் 
பாதரச சூட்டில் 
பக்குவமாய் மூடிப் பாதுகாப்பாகின்றது... 
அலைகள் 
கரைதனில் எழுதும் கவிதைகளைப் படிக்க 
காதலர்கள் 
எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

- மு.முகமது பாட்சா*
14/01/2018 (19) 

No comments:

Post a Comment

Popular Posts