Friday, 12 January 2018

நிழலின் நிழல்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நீண்டு, பரந்து, விரிந்த நிழலுக்கு 
உருவம் கொடுத்தவர்கள் 
இதுதான் 'நிஜம்' என்றார்கள். 

கிளைகள் முழுவதும் 
நகங்களை விளைவித்த நிழல், 
'நிழல்கள்தான், 
இனி நிஜங்களென்று' 
கர்வம் சூட்டிக் கொண்டது. 

நிஜத்தின் குறுக்கம் கண்டு 
"நீ நிழலாகிவிட்டாய்" என்று நகைத்தது. 

அடைக்கலம் வந்த பறவையொன்றை 
நிழலில் கூடு கட்டச் சொன்னது. 

சிரித்துவிட்ட பறவை, 

"நிழல்களெல்லாம், நிஜங்களானால் 
நிஜங்களென்பது 
காணாமல் போய்விடும்" என்றது 

"நிஜங்களொழிந்தால் 
நிழல்கள்தானே நிஜங்களாகும்" 
என்றது நிழல். 

"நிஜங்களொழிந்தால், 
நிழல்களுக்கு ஜனனமேது?, 

நீங்களே,நிஜங்களிட்ட பிச்சைகள்தான் 
நிழல்களெல்லாம், 
நிஜங்களின் கைபிடித்து மட்டுமே 
நடக்கத் தெரியும் ! 
கர்வத்தின் நிழலை கழற்றியெறி" என்றது 

பறவை கழித்த ஞான எச்சத்தில் 
தலைக் குளித்தெழுந்த, நிழலும் குறுகி 
நிஜத்தினடியில் குள்ளமாய் அமர்ந்தது. 

மரத்தினடியில் அமர்ந்திருக்கும் இவனே 
ஞானியென்று, 
ஒரு கூட்டமொன்று கூடி நிற்க, 
"நான் நிழல்தான்" என்று சொல்லிவிட்டு 
எதிர்த் திசை நோக்கி 
அவன் , மெல்ல நடக்கத் தொடங்கினான் ! 

- மு.முகமதுபாட்சா*
12/01/2017 மீள்

No comments:

Post a Comment

Popular Posts