Tuesday, 2 January 2018

அக்கவிதை


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

எழுதாத கவிதைகள் உங்களிடமிருந்தால் 
என்னிடம் தாருங்கள் 
அதில் நானெழுதாத சில வார்த்தைகள் 
ஒளிந்திருக்கின்றன, 
பறவையின் சிறகுகளில் பயணிக்கும் எழுத்துகளை 
அலகினால் கோதிக் கொண்டிருக்கிறேன் 
உதிரும் படிமங்கள் 
ஓராயிரம் யுகத்தைச் சுமந்து இறங்குகின்றன, 
என் எழுது கோலின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் 
உதிரத் துர் நாற்றம் அப்படியே இருக்கட்டும், 
உடைந்து போன சமூகங்கள் நிமிரும் வரை 
அது காயப் போவதில்லை, 
பட்டாம் பூச்சிகளில் சிறகுகளில் பயணிப்பதும் 
பாடும் நிலாவில் உட்கார்ந்திருப்பதும் 
காயாத கற்பனையில் கண்ணயர்வதற்குத்தான், 
கலகம் செய்யும் எழுத்துகள் 
வார்த்தைகளின் முனையைத் தீட்டிக் கொள்கின்றன, 
ஒற்றை வார்த்தை கவிதையொன்றை சொல்கிறேன் 
பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.... 
அஃதென்றுமே பொதுவான கவிதை.... 
நாடக அரசியலைக் கண்டால், 
நய வஞ்சகர்களின் நடிப்புகளைக் கண்டால், 
சாதியக் கொடுமைகளைக் கண்டால், 
மானிடத்தை இழித்துரைக்கும் மடமைதனை கண்டால் 
தீராத கோபத்துடன் 
எச்சில் சேர்த்து உதிர்த்திடுங்கள் அக் கவிதையை 
.............." ச்சீய் " த்தூ ! .............

- மு.முகமது பாட்சா*
02 / 01 /2018  (3 )

No comments:

Post a Comment

Popular Posts