
அரூபமொன்று
உருவம் கொண்டு நடந்து போவதாக
வதந்தியொன்று பறந்து வருகிறது,
காற்றினைப் பைகளில் பிடித்துக் கொண்டு
சிலர் நடந்து போகிறார்கள்,
மின்னலென்பது உருவமா? அரூபமா?
வாதம் மேலோங்கி நிற்க...
மேகங்களின் வேற்றுப் பிரதிகளாய்
மழை வழிந்து கொண்டிருக்கிறது,
தேநீர் சூட்டின் சுவை
மூளையை லேசாக வருடிக் கொண்டிருக்க,
நிழல்கள்
உருவத்திற்காக உரிமை கொண்டாடுகின்றன,
இரவு பகலின் நிழலென்றும்
பகல் இரவின் அரூபமென்றும்
நாடோடியின் பாடலொன்று இசைக்கிறது,
இறந்தவனின் உயிர்
மண்ணறைக்குள் புதைவதேயில்லை...
எரித்தாலும் உடல் துர்நாற்றம் வீசுகிறது,
காக்கைக்குச் சோறிட்டவனின் தந்தை
ஆசிரமத்தில் அநாதியாகக் கிடந்தவன்,
உருவங்களாய் வாங்கிக் குவிக்கிறது ஆசைகள்...
ஆசைகள் மட்டும் எப்போதும் அரூபமாய்,
எழுத்துகளால் நிரம்பி நடக்கும் இந்தக் கவிதை
மனதிற்குள் உட்கார்ந்து கொள்ளும் அரூபமென்று
வாசிக்கும் கண்களாவது அறியுமா?
- மு.முகமது பாட்சா*
12/01/2018 (18)
No comments:
Post a Comment