
ஹலப் நகரத்து வீதிகளில்
ஜெஸ்னா அலைந்து கொண்டிருக்கிறாள்,
பீரங்கிகளின் அலை வரிசைகளைக் கடந்து
சஜ்ஜிதாவில் வீழ்ந்துக் கிடந்த
கட்டிடங்களின் புழுதிக் காடுகளில்,
பிணங்களின் கூறுகளுக்குள்ளாகத்தான்
உறவுகளைத் தேடி,
ஹலப் நகரத்து வீதிகளில்
ஜெஸ்னா அலைந்து கொண்டிருக்கிறாள்.
'அல்லாஹூ அக்பர்'
'அல்லாஹூ அக்பர்' தக்பீர் முழக்கங்கள்
அல்லாஹூவிற்கும் கேட்கவில்லையோ
இரத்தக்கூழாய் சிதைந்த
அத்தா அப்துல்லாவை
அப்போதுதான் அவள் பார்த்துவிட்டு வந்தாள்,
இரண்டு கால்களும் சிதைந்த
அம்மா ஆயிஷாவின்
அந்தக் கடைசி இரத்தப் புண் நகையை
எப்படிதான் மறக்க முடியும் ?
"காணாமல்போன தம்பி ஸூபைரே!
நீ என் கண்களில் மட்டும் பட்டு விடாதே,
உனக்காக அழுவ
என் கண்களில் கண்ணீர் மிச்சமில்லை. "
"யாருக்காக ஹலப் நகரம் அழுது கொண்டிருக்கிறது ?
அல்லாஹ் உனக்காகவா?
யா அல்லாஹ் உனக்காகவா? "
"என் அருமை ஹலப் நகரமே!
எம் நாயகமும், கலிஃபா உமரும் இருந்திருந்தால்
நீ இப்படி அழுது கொண்டிருப்பாயா?"
"ஒற்றுமைக் கயிரை விட்டுவிட்ட இவர்களுக்கா,
அல்லாஹ் சுவனத்தைச் சொந்தமாக்கப் போகிறான் ?"
கண்ணீரைத் தொட்டு
கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாள் ஜெஸ்னா
"யா அல்லாஹ், என்னையும் அழைத்துக் கொள்,
உன்னிடம்
நான் கேட்கவேண்டிய கேள்விகள் அதிகம் இருக்கின்றன"
- மு.முகமதுபாட்சா*
13/01/2017 மீள்
No comments:
Post a Comment