தேசத்தின் சுவர்களுக்கு
வெள்ளையடிப்பதாகச் சொல்லி
கறுப்பைப் பூசிக் கொண்டிருந்தார்கள்.
கண்களை
மூடிக் கொண்டு பார்ப்பதால்தான்
கறுப்பாகத் தெரிகிறதென்றும்
சொல்கிறார்கள்.
நட்சத்திரங்களையும் நிலவையும்
வரைந்து விட்டுப் போன ஒருவன்,
நாமெல்லாம்,
இரவில் இருப்பதாகச் சொல்கிறான்.
விடியுமா? என்று கேட்டதற்கு
'விடிந்து விட்டால்,
கனவுகள் கலைந்து விடும்
பரவாயில்லையா!' என்கிறான்
தேநீர்க் கடைகளில் கூட்டமாய் நின்று
பேசிக் கொண்டிருந்தார்கள்,
சூரியனை இழுத்துவந்து
கட்டுவோமென்று,
நேற்றே அது
கடலில் விழுந்து இறந்துவிட்டதாக
ஒருவன்,
துயரத்தைப் பகிர்ந்து கொண்டான்.
வெளிச்சத்தைக் கேட்டு
அரசாங்கத்திடம் முறையிட்ட நொடியில்,
அதானி குழுமத்திடம் கேட்டிருப்பதாக
பதில் வருகிறது.
யாககுண்டங்களில் பாகம் வார்த்து
வேள்விகள் நடக்கின்றன...
சர்ச்சுகளிலும், மசூதிகளிலும்
சிறப்புப் பிரார்த்தனைகள்...
குதிரையில் வருவான் சூரியனென்று
பார்த்துக் கொண்டே நிற்க,
அமெரிக்காக் காரன்
கடலை விற்றுக் கொண்டிருக்கிறான்
நமக்கான களைப்பை போக்க !
அமேசான் ஆர்டர் செய்யச் சொல்கிறது
சூரியனை பார்சலில் அனுப்புவதற்காக.
அலிபாபா குகையைத் திறந்து
சைனாக்காரன் அழைத்துக் கொண்டிருக்க
நாங்களெல்லாம்
பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம்,
வங்கிகளின் வாசல்களில் !
- மு.முகமதுபாட்சா*
(மீள் - 08/01/2017)

No comments:
Post a Comment