
பூனைகள் வெளிவந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்,
பூட்டி வைத்த இரகசியங்கள்
இப்போதுதான் வெளியே வந்து மெல்ல எட்டிப் பார்க்கிறது ,
மருத்துவமனை ஆயுதங்களையும்
கொலை செய்வதற்குக் கூடப் பயன் படுத்தலாம் .
தடாகங்களைச் சுத்தம் செய்யும் மீன்களை
தோட்டிகளென்று யாரும் ஒதுக்கிவிடுவதில்லை !
இராட்சச நாக்குகள் நீட்டிப் பார்க்கும் இடத்தில்
உட்கார்ந்து கொண்டுதான்
மக்கள் அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள் !
வேட்டைத் தொழிலை விட்ட இனக்குழுவிற்கு
அரசியல் தொழிலும் பழகி விடுகிறது !
மதுவின் கோப்பையில் விழுந்த ஈக்களும்
மரணிக்கத்தான் போகின்றன ,
ஆனாலும் ஆசை யாரை விட்டது,
சித்தாந்தங்களும், வேதாந்தங்களும்
மோதிக் கொள்ளும் பூமியில் மட்டுமே
சிக்கிச் சிதறுகிறார்கள் மனிதர்கள் !
முடிச்சுகள் இல்லாத கவிதையென்றே தோன்றும்
எங்கோ ஒரு முடிச்சு
எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டுதான் நகர்கிறது !
- மு.முகமதுபாட்சா*
10/02/2017
No comments:
Post a Comment