
காலத்தீயில்
எதையாவது போட்டு பொசுக்கிக் கொண்டேயிரு
காளான்கள் குடை பிடித்தால்
புல் நனையாதென்பது புத்த பழமொழியா?
இரவுகளை போர்த்திக் கொண்டு
எங்கே நடக்கிறாய்?
உனது நிழல் உனது எசமான்.
விகடங்களைப் புகைத்து கொண்டிருக்கிறாய்
காலின் கீழ் புற்கள் எரிகின்றன..
அன்னையின் மடியில் ஆகாச பூதமொன்று
துளையிடுகிறது...
மீத்தேன் கிணற்றில் விளைவது
பஞ்சமா? பட்டினியா?
அடுத்த தலை முறைக்கு
அலுமினியத்தட்டுகளாவது கிடைக்குமா?
மரங்களைத் தேடும் போது
கள்ளிச் செடிகள் கைதட்டிச் சிரிக்கும்,
வறண்ட ஓடைகளில் தலை மட்டும் கவிழ்ந்திருக்க
நிஜம் நீரறுந்த கால சக்கரத்தை தேடும்,
நீயென்பதும் நானென்பதும்
நிச்சயம் அன்று அறுந்து போயிருக்கும்.
ஆளவந்தவனை அறுத்துத் தின்பார்கள் மக்கள்
சமத்துவம் ஒருவேளை
சங்கீதம் பாட தொடங்கியிருக்கலாம்,
அதுவரை
காலத்தீயில்
எதையாவது போட்டு பொசுக்கிக் கொண்டேயிரு
- மு.முகமது பாட்சா*
19/02/2018
No comments:
Post a Comment