
ஊருக்கு ஒதுக்குப் புறமாயிருந்த
ஆலமரத்தின் சந்துக்குள்
தன்னிதயத்தை வைத்திருந்தான்,
அங்குதான் அவள்
அவனிதயத்தில் கூடு கட்டினாள்,
பார்வைகளைப் பின்னி
பஞ்சு மெத்தையமைத்தாள்,
இதழ் மலரில் தேன் கொடுத்து
இதயத்திற்கு வலு கூட்டினாள்,
ஆலம் விழுதுகளை ஆட்டிவிடச் சொல்லி
ஊஞ்சலாடினாள்,
சிரிப்புகளை அதிகதிகமாயிரைத்து
பறவைகளுக்குப் பாசம் காட்டினாள்,
அதன் கிளைகள் ஒவ்வொன்றும்
மினாராக்களாய் வனைந்து
தாஜ் மகாலாய் மாறிக் கொண்டது...
ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனவர்கள்
அப்போது அறியவில்லை...
அவள் அங்குதான்
தொங்கு சமாதி அமைத்துக் கொண்டாள் !
ஷாஜஹான் தாஜ் மகாலை
தேடிக் கொண்டிருக்கிறான்....
அவனிதயத்திலிருந்து வழியும் கரும் புகை
புகை போக்கி வழியே
மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது.
மு.முகமது பாட்சா*
15/02/2018
No comments:
Post a Comment