
ஹயாவின் கைகளைக் காணவில்லை
அவளின் குரல் பதிந்த குரானின் சங்கீதம்
தூள் தூளாக நொறுங்கிக் கிடக்கிறது
இனி இரவுகளையும் பகல்களையும்
அந்த அழகியக் கண்கள் காணமுடியாது....
அழகியப் புன்னகையை
ஏன் இன்னமும் மிச்சம் வைத்திருக்கிறாய்?
இரக்கமற்றவர்களைக் காணும் முன்பே
இதயத்தைத் துளைத்திருக்குமோ அந்தக் குண்டு!
மர்லா உன்னைப் பார்க்க வருவாளா மகளே...
உன் ஜுனைத்தும் அபித்தும்
எந்த குழியிலிறங்க தயாராக இருக்கிறார்கள்?
முகம்மத்தின் விளையாட்டு துப்பாக்கியை
புதைத்தவிடத்தில்தான்
நிஜத் துப்பாக்கியும் வெடித்திருக்கிறது தாயே!
இந்த இரத்தக் களரி பூமியில்
ரோஜா பூக்களல்லவா இறந்து கிடக்கின்றன
மலடி பெற்ற மகன்களுக்கு என்னத் தெரியும்
மக்களைப் பெற்ற தாய்களின் கண்ணீர்...
மிச்சம் மீந்து நிற்கும் துவாக்களையாவது
தோட்டாக்களாக மாற்ற முடியுமா?
பாரம் சுமந்த இதயத்தில்
துப்பாக்கி ஏந்திதான் உன்னைப் புதைக்கிறேன்...
யா அல்லாஹ் என்கின்ற எங்களின் பெருமூச்சு
அசுரவேகம் எடுக்காதா?
உலகத்தாரே
உங்களின் ஒட்டு மொத்த துவாக்களையாவது
எங்களின் பக்கம் திருப்புங்களேன்
ஆமின் என்ற ஒரு வார்த்தையாவது
அல்லாஹ்வின் செவிகளில் உடனே எட்டட்டும்.
- மு.முகமது பாட்சா*
25 /02 /2018
No comments:
Post a Comment