Wednesday, 21 February 2018

மௌனம் பஞ்சென மிதக்கிறது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி மற்றும் இயற்கை

நீள்வட்டப் பாதையில் சுழன்று
மெல்ல வீழும் சருகினிற்கு
மௌனம் பஞ்சென மிதக்கிறது...
பதுமைக் கடையில்
சிரிக்கும் பாவைகளுக்கு
குழந்தைகளை வாங்க ரொம்பவும் ஆசை...
ஆசை காட்டி சோறூட்டுகிறாள் அம்மா
நிலா அநாதியாக நின்று இரசிக்கிறது...
ஆசையான ஒன்று காதலாகிறது
காதல் கவிதையிலமர்ந்து காட்சியாகிறது...
காலம் நிதானமான ஒன்று
ஆசையில் உட்கார்ந்து கொண்டு
வேகமாகச் சுழல்வதாக பொய் சொல்கிறோம்...
விதைத்ததை எல்லாம் பதராக்கிவிட்டு
விதைக்காததை விளைச்சலாய் எடுத்து
பெருமை பேசுகிறோம்....
நிழலின் கீழ் 
நகர்ந்து கொண்டிருக்கும் பூமி
பசியோடு மெல்ல வாய் திறக்கிறது....
ஆசைகள் அறுந்து விழுந்து கொண்டிருக்க
ஓலங்கள் நிர்க்கதியாக அலைகின்றன...
மெல்ல வீழும் சருகினிற்கு
மௌனம் பஞ்செனவே மிதக்கிறது.

- மு.முகமது பாட்சா*
21/02/2018





No comments:

Post a Comment

Popular Posts