Monday, 26 February 2018

உறக்கமில்லா இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர்

என்னிரவுகள் 
புரண்டு புரண்டு படுக்கின்றன
எங்கோ வெடிக்கும் 
வெடியோசையின் வீச்சில்
குழந்தைகளின் பற்கள் 
சோழிகளாக உருள
உறக்கம் கலைந்த ஆகாயத்தின் கண்கள்
பஞ்சடைந்து குருடாகிறது
பெயர் எழுதப்படாத அரிசிக்காக
கையேந்தி நிற்கிறவன்
அவன் ஈரலை சமைக்கச் சொல்லி
தந்துவிட்டுப் போகிறான்
இறந்துவிட்ட பிரபலம்
செய்திகளில் உயிர் வாழ்கிறாள்
சிலையொன்று இறந்துவிட்டதாக
எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்
வன்புணர்வின் தூமையில்
சாதிய புழுக்கள் நெளிந்து கொண்டிருக்க
சாத்தான் தன்னை
தேவதூதனென்று அறிவித்துக் கொள்கிறான்
கடவுளைச் சுடுவதற்கு
துப்பாக்கிகள் தயாராகின்றன
விவசாயிகள் 
நீரின் பாதைகளை தேடியலைய
நட்சத்திரங்கள் விளைந்திருப்பதாக
அரசியல்வாதி பேசுகிறான்
ஏழைகளெல்லாம் 
குழிவெட்டி மண்மூடி பதுங்கிக் கொள்கிறார்கள்
பசியிடமிருந்து தப்பித்துக்கொள்ள
சீரணிக்காத அதீத உணவை  
வாந்தியெடுத்தவர்களின்  இரவுகள்
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க
தூக்கம் வராமல் என்னிரவுகள் மட்டும்
புரண்டு புரண்டு படுக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
26 /02 /2018



No comments:

Post a Comment

Popular Posts