
நீ கொடுத்த வெள்ளைத்தாளில்
மது குடுவை
நுரைத்துப் பொங்குகிறது...
வாசம் பட்ட இதயம்
காற்றில் பறக்க,
வாசல் தேடும் பட்டாம் பூச்சிக்கு
வழி காட்ட
பூக்கள் மறுக்கின்றன...
கூதல் காற்றின் குளுமையிலும்
வியர்த்துக் கொட்டும் சித்தாந்தம்,
தேனீக்கள் பாடம் நடத்துகின்றன
தேன் எடுப்பது எப்படியென்று...
ஆழ்ந்த தேடலின் வேளையில்
முத்தங்களால்
முகவரியெழுதுகிறாய்...
பரிசலோட்டி
நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறான்,
பார்வைத் தூண்டிலில் மீட்டெடுத்து
மீண்டும்
நீருக்குள்தான் விடுகிறாய்...
மூச்சடங்கி இறந்தவன்
சொர்கத்தின் பூமியில்
ஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்...
தேவதைகள் அத்துணைப் பேரும்
நீயாக மாறி நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்க,
நான் குடிக்கும் மதுவின் துளிகள்
வெள்ளைத்தாளில் விழுந்து
கவிதைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன!
- மு. முகமதுபாட்சா*
14/02/2017
No comments:
Post a Comment