
காதில் சொன்ன வார்த்தைகளை
இதயத்திற்குள் முடக்கி
நிர்வாணமாகிறான்
நூறு நிலாக்கள் முகத்தில் பிரகாசிக்க
வார்த்தைகளில்லாத வானம்
மேகத்தை நிறைக்கிறது
நிழல் மெல்ல வளர்ந்து
மலைகளுக்குள் நுழைகிறது
காற்று சொல்லும் வார்த்தைகளில்
காயப்படாமல்
வனத்திற்குள் புதையும் போது
விரல்கள் பத்தும்
மிளகுக் கொடியில் படர்கின்றன
வெந்தயத்தின் நிறம் பூசிக் கொள்ளும் தேகம்
மழை வாசனையில் மெல்ல அசைக்கிறது...
பூத்துக் கிடந்த பூக்களையெடுத்து
ஆகாயத்திற்கு வீசுகிறான்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கும் அவை
வார்த்தைகளை
அவனுக்கு சொல்லித் தருகிறது
அவனதை அவளின் காதில் ஓதுகிறான்
பூமி வெட்கப்பட்டு மழை பிரசவிக்கிறது....
கடல் வற்றிக் கொண்டிருக்க
வார்த்தைகளை
மேகங்களாய் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தொலைந்து போனவனை
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கின்றன.
- மு.முகமது பாட்சா*
07/02/2018
No comments:
Post a Comment