
இலக்கியத் திரட்டு
வெட்கத்தின் விளிம்பில்
ஏன் நிற்கிறேன் எனக் கேட்கிறாய்?
எப்படிச் சொல்வேன் தோழி!
கட்டற்ற அழகனவன்!
கண் நிறைக் கொள்ளனவன்!
காதல் பற்றற்ற இளம் பருவத்தில்...
மட்டற்ற மகிழ்விலென்னை
தொட்டே, கட்டியணைத்து
வலியால் அழுவேனென்று
மென் பூவால் பந்தெறிந்து
பொல்லாச் சிரிப்பூட்டி
அழகாய் மணலில் வீடு கட்டி
மகிழ்வாய்த் தந்தனவன்
சட்டென்றே எதிரில் வந்து நிற்கிறான்!
பொற்கொடியாள் என் செய்வேன்?
காதல் வெப்பத்தகிப்பினில்
இடையணியும் நழுவி விட
காதலின் கற்பு நிலை எப்படி காப்பேன்?
என்போல்
அவனும்தான் தகித்துப் போனான்
என் அன்னை அவனெதிரில்
பட்டென்று வந்து நின்றாள்...
சட்டென்றே அவனும்
சாமார்த்தியக் காய் நகர்த்தி
தாகத்தின் பிணித் தீர்க்க
தண்ணீர்தான் வேண்டுமென்றான்...
உட்பொருள் நானறிய,
மேம் பொருளுமறியா அன்னை
நீர்க் கொடம்மாவென்று நகர்ந்து விட்டாள்!
தளும்பி நின்ற நீர்க் குவளை
நானாகி அவன் கவனம் திசைத் திருப்ப
சட்டென்றே பிடித்து விட்டான்
சாமர்த்தன் என் வளைக் கரத்தை !
அய்யோ !
பிறவிப் பெண்மையின் அச்சம் சூழ்ந்தே
அம்மா ! என்றலறிவிட்டேன்
பதறித்தான் போனாலம்மா,
பெண் பிள்ளை என் ஆனாலோ என்று
ஆகா!
தப்பன்றோ! சடிதியில் உணர்ந்தவள்
'தாகத்தால் இவன் விக்குகிறான் அம்மா'
என்று பொய்யுரைக்க
'சற்றே பொருமையடா' என்றே
தாயன்பில்
அவன் தலையை துவட்டிச் சென்றால் தாய்!
சொல்வாயா தோழி என் துயரை,
என் வெட்கத்தின் நிறம் மாற்றிச் சென்றவனை
பக்கத்தில் என்றேனும் முகம் பார்த்தால்!
- மு.முகமதுபாட்சா*
17/02/2016
***
மூலப் பாடல் :
சங்க இலக்கிய காதல் கதை - குறிஞ்சிக்கலி
------------------------------------
சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.
- கபிலர்*
No comments:
Post a Comment