
அம்மன் தேராட்டம்
அழகா இருக்கேண்ணு
அத்தமார் சொன்னாங்க,
அப்பவும்தான் எனக்குத் தெரியல...
வள்ளிக் கெழங்காட்டம்
வளமா இருக்கேண்ணு....
மாமன்மார் சொன்னாங்க
அதுவுங்கூட எனக்குப் புரியல...
கரகத்தைத் தலையில்வச்சி
ஆடச் சொன்னபோது...
எங்கெரகமும் ஆடும்முண்ணு
நானும்தான் வெளங்கல....,
தப்பான இடத்தில் கைவச்சி
காசுசொருகும் காமுகரை
தடுக்கவும்தான் முடியல,
பொல்லா அழுகையை
புதைச்சி வச்சிகிட்டு
கள்ளச் சிரிப்போடுதான் ஆடுறேன்
என் வவுத்து நெருப்பு மட்டும்
ஏன் இன்னமும் அணையல...?
சக்திக்கரகம் ஆடிவச்ச போதும்
தப்பான பார்வைய
எவனும்தான் விலக்கல...
சொம்புக்கரகம் ஆடிவச்ச போதும்
என் சொம்புகள தட்டுவத
எவனும்தான் நிறுத்தல...
தோண்டிக்கரகம்
அம்மனுக்கு ஆடிவந்தும்
தோலுரிக்கும் பார்வையெல்லாம்
என் பக்கத்தில்....
உடுக்கைச் சத்தமும் ஒண்டி முழங்க
பறையடிக்கு, நானுமிப்ப
பாழாய்தான் ஆடுறேன்....
என் சவத்து முன்னால சவமா நின்னு
நானேதான் என்னை தேடுறேன்
- மு.முகமதுபாட்சா*
28/02/2017
No comments:
Post a Comment