
பெயரும் நானும் பேசிக் கொள்வதில்லை
பெயரை தூக்கிக் கொண்டேத் திரிவது
மிகவும் கஷ்டமாக இருக்கிறது,
யார், பெயரைச் சொல்லி அழைத்தாலும்
நான்தான் திரும்பி பார்க்கிறேன்...
நானென்பதின் மேல்தான் உட்கார்ந்து
அஃது அதிகாரம் செய்கிறது,
அங்கீகாரங்கள் அத்திணையையும்
பெயரே எடுத்துச் செல்கிறது,
நான் மட்டும்
எப்போதும் நானாகவே இருக்கிறேன்,
பெயர்களேயில்லாத
ஆதிகாலத்திற்குள் நுழைந்துவிட
இப்போதும் ஆசைப் படுகிறேன்...
பொது விளிப்புகளில் உட்கார்ந்து
பொதுவுடைமையாவது பேசியிருப்போம்...
அகந்தையின் முதல் ஆரம்பமே
பெயராகத்தான் இருக்கக் கூடும்.
சாதிகளையும் மதங்களையும் கூட
பெயர்கள்தானே கட்டமைக்கின்றன...
பெயர்
என்னையே தின்று கொண்டிருக்க
நான் மட்டுமே தனியாக உட்கார்ந்து
என் பெயரை பற்றியே
சிந்தித்து கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
16/02/2018
No comments:
Post a Comment