
என்னை என் கவிதைகள்
திருத்தம் செய்து கொண்டிருந்தன,
அவற்றின் கைகளில்
சிறிய சுத்தியலும் சில உளிகளும் கூட இருந்தன,
நான் கல்லாகச் சமைகிறேன்
என்னில் பூத்த மௌனத்தை
வரவாக வைத்துக் கொண்ட மொழிக்கூடு
ஆங்கே வெளிச்சம் பாய்ச்சுகிறது,
தலையில்
கூடொன்றைச் செதுக்கியக் கவிதையொன்று
சில பறவைகளையும் முட்டைகளையும்
அவயம் காக்கச் செய்கிறது,
பச்சைய நரம்புகளை
பக்குவமாய் ஒரு கவிதைச் செதுக்கி வைக்க
போதிமரத்தை என்னில் ஏன் செதுக்குகிறதென
ஆச்சரியத்தில் மூழ்குகிறேன்,
ஈட்டிகளும்,
அம்புகளுமாய்க் கூட என்னில் செதுக்கப் பட்டு
மார்புக் கூட்டிற்குள் பதுக்கப் படுகின்றன...
நானொரு ஆயுதக் கிடங்கா?
கண்களைத் திருத்திய மகாக் கவிதை
விழிகளைத் திறந்தபோது
உக்கிரம் கூடிய இரத்த நிலவுகளாய் மிளிர்ந்தன,
கால்களின் வழியோடிய வேர்கள்
கவிதையொன்றை தேடிக் கொண்டிருக்க
கூட்டினை பைய எட்டிப் பார்க்கிறேன்
பறவை குஞ்சுகள் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.
- மு.முகமது பாட்சா*
03 /02 /2018
No comments:
Post a Comment