
அந்த அறைக்குள்
ஒவ்வொருவராக உள்ளே நுழைகிறார்கள்...
ஒவ்வொருவரின்
கைகளிலும் சில கனவுகள்...
அவர்கள் தனக்கென்று ஒரு கதையை
சோடனைகளுடன் வைத்திருக்கிறார்கள்...
கதையின் படிமக்கூறுகளில்
யாமக் கோடாங்கியின் அலறல் சப்தம்...
ஒரு நாடோடிப் பாடகனின் சோகப் பாடல்,
ஒரு கழைக்கூத்தனின் இலாவக நடை,
ஒப்பனைக்கலையா இராசபாட்டின் மிடுக்கு...
இத்துணைக்குள்ளும்
ஒரு யட்சியின் மாபெரும் கதறல்...
கூடவே தூமையின் அரூபச் சித்திரம்...
என் ஒப்பனை முகத்தை
கைகளில் விரித்துப் பார்க்கிறேன்...
அதிலொரு
யாசகனின் அழுகை ஒட்டிக் கொண்டிருக்க
நான் இன்னமும்
அந்த அறையின் வெளியில்தான்
காத்திருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
21/05/2019
No comments:
Post a Comment