Tuesday, 28 May 2019

மீனவன் - ரமலான் 19

மீனவன்  - ரமலான் 19
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
ஞானத் தேடலில் 
அவன் ஓடிக் கொண்டேயிருந்தான்... 
அவனுக்குள்ளிருந்த இல்ம் 
அவனைச் சூஃபி என்று பெருமை காட்டியது 
தலைப்பாகையும் தாடியும் 
தஸ்பீகளின் 
உருட்டலும் முஸல்லாவில் தொழுகையும் 
முகிழும் முறுவலும் 
போதுமென இயற் கொண்டான்.... 
சவுக்கை வனத்தில் 
சல்லாபிக்கும் அலைக்கரையில் 'அல்லாஹ்' 
திக்ருகளை ஆழமாக விதைத்தான்... 
காலம் கரைந்தாலும் தேவையொன்று 
அவனைச் சுற்றியே வந்தது.... 
அங்கு வந்த மீனவன் 
நிழலில்லாத பூமியில் 
நீ எதைத் தேடுகின்றாய் எனக் கேட்டான்.. 
தேடல் இறையை என்றாலும் 
நிலத்தில் வியர்வை விழ வேண்டும் 
இருந்தவிடத்தில் 
காய்ந்து கிடப்பது கருவாடு மட்டும் என்றவன் 
அலையை நோக்கி விரைவாய் நகர்ந்தான் 
வலைக்குள் வசமாய்ப் பிடித்தவன் 
ஞானச் செருக்கு அறுத்த மீனவன் நீதான் 
என்று நிலையாய் அழுதான் சூஃபி... 
அவன் உதிர்த்த கண்ணீர் 
நிலத்தில் விழும் போது அலையின் சப்தம் 
அல்லாஹ் என்றே திக்ரில் இயைந்தது.

- மு.முகமது பாட்சா*
26/05/2019

No comments:

Post a Comment

Popular Posts