
கட்டிப் போடாத ஒட்டகமாக
மனசெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாய்
வெகு தொலைவில் புழுதிப்புயலின் வாசம்
நான் பாலை என்பதால்
உன் மேய்ச்சல் எனக்குள் நிகழ்கிறது...
எனக்குள்ளிருக்கும் வெறுமை
உன் பாதங்களை நோகடிக்கின்றன...
ஈச்சங்கனியாய் ஓர் இளமுறுவல் உன் இதழ்களில்
சித்தாரில் இசைக்கும் இரவு
மெட்டாடைக் கொண்டு போர்த்த...
ஓர் இரவு பாடலின் வரிகளில் நுழைந்து
வாசனைத் தோட்டத்தில் நுழைகிறோம்...
இல்லாத கிணற்றில்
நீரருந்துதல் சுகமென்றாலும்
தாகம் மட்டும் தணிந்துவிடுவதில்லை...
நான் தேடுவது சுகமே
என் தேடலின் ஆதிக்கம் நீ என்பதால்...
அவர்கள் சிரித்துக் கொண்டே
என்னை மஜ்னூன் என்கிறார்கள்
நானும் சிரித்துக் கொண்டே
லைலாதான் என் தேசத்தின் காதல் என்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
24/05/2019
No comments:
Post a Comment