Thursday, 2 May 2019

பெட்டியென்பதே பூட்டப்பட்டது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், வானம், வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்

அந்தப்பெட்டி 
அதி கனமாகத்தான் இருந்தது 
நால்வரால் கூட அஃதை 
அசைக்கமுடியவில்லை 
அதன் பூட்டும் கனம் வாய்ந்ததே... 
மாண்புமிகு கனவானின் 
வாகனத்திலிருந்து இறங்கிக் கொண்ட அஃது 
ஊமையாகவே இருந்தது... 
நகர்த்தியவர்களின் 
வாய்களும் கூடக் கட்டப்பட்டிருந்தன... 
பெட்டியை இப்போது 
தேடிக் கொண்டிருக்கிறார்கள்.... 
பெட்டியென்பதே பூட்டப்பட்டதுதான் 
என்பதாக வாதம்... 
புதையல் இருந்திருக்கலாம் 
என்ற யூகங்களும் பேசிக்கொண்டன... 
வெட்டப்பட்ட உடல்கள் 
இருந்திருக்கலாம் என்பதும் பேச்சு... 
பெட்டியே பிரமை தானென்று 
கனவானின் காவலாளி சொல்கிறான்... 
பூட்டிய பெட்டிற்குள் 
ஒரு தேசம் அழுகிக் கிடப்பதாகக் 
கோடாங்கி குறிசொல்லிச் செல்கிறான்... 
அகராதியைப் புரட்டிப் பார்க்கிறேன் 
பெட்டி என்பது மர்மம் என்று 
விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது... 
அந்தப்பெட்டி 
இன்னமும் கனமாகத்தான் இருக்கிறது. 

- மு.முகமது பாட்சா*
02/05/2019

No comments:

Post a Comment

Popular Posts