
எழுத்துகளைக் கொட்டிவைத்து
கவிதையென்கிறாய்
அதன் கீழிருக்கும் பெயரில்தான்
எத்துணைப் பிழைகள்?
தேனீக்களின் சேகரிப்பில்
மகரந்தம் சூளடைகிறது...
வார்த்தைகளை
வளைக்கத்தெரியாதவனின்
வாசல் மட்டுமல்ல முற்றமும் கோணல்
பறவைகளோடு
வார்த்தைகள் சிறகடிக்கின்றன...
மேகமென்பதே கடலெழுதிய கவிதைதான்
நனைவதற்கு நிலமகள்
தன் வாசலைத் திறந்து வைத்திருக்கிறாள்
எறும்புகளின் வரிசையில்
எழுத்துகளின் சீரைக் கோர்த்துப்பார்
சிலந்திகளின் வலைப் பின்னலில்
எத்தனை எழுத்துகள் ஒட்டிக்கிடக்கின்றன!
எத்துணை நாளைக்குத்தான்
நிலாவைப் பிடித்துத் தொங்குவாய்?
நட்சத்திரங்கள் அலுப்பில் உறங்குகின்றன
அணில்களின் கொறிப்பில்
அழகான கவிதைகள் தெரித்துவிழுமே!
உறக்கத்தைக் கெடுக்கும்
குறட்டைக்கும் கூட ஒரு ரிதம் இருக்கிறது
சொல்லுக்கழகு சுயமாய் விழவேண்டும்
சொல்லாத பொருளுக்கெல்லாம்
கவிதையெதற்கு நண்பா!
இதன் கீழ் இருப்பது
என் பெயரல்ல - இயற்கை.
- மு.முகமது பாட்சா*
10/05/2019
No comments:
Post a Comment