
பஞ்சுப்பொதிகளை இறைத்தார்போல்
எங்குப் பார்த்தாலும்
மேகக் கூட்டங்களாகவே இருக்கிறது
நடந்து போகும் பாதையில்
துணைக்கு வருவது போல்
அவை தொடர்ந்தும் வருகின்றன...
ஒரு சமயம்
ஓடும் குதிரையின் முகம் பார்த்து
அசந்திருக்கிறேன்...
பிறிதொரு நாளில் அம்மா சொன்னாள்
மேகம்
நினைத்த உருவில் மாறிக் கொள்ளும்...
கரடிகள் சண்டையிட்ட மேகம்
மெல்லக் கரைந்து
புத்தனாக நடந்து செல்கிறது...
வானத்தின் கடல்தான் மேகங்களென்றும்
அதில் மீன்கள் அதிகம் இருப்பதாக
அண்ணன் ஒரு நாள் கதைக் கட்டியிருந்தான்..
தெரு கூத்து பார்த்த மேகங்கள்
ஒப்பனைகளுக்குள் ஊடுருவுவதைப் பார்த்தேன்...
மேகங்கள்
அரூப ஓவியங்களின் அப்பனாக இருக்கலாம்...
இரசனையில்லாதவர்களுக்கு
மேகம் வெறும் மேகமாகத்தான் நகர்கிறது...
மேகங்களுக்குப் பின்னால்
தேவலோகம் இருப்பதாகக் கூறி
அரசியல்வாதிகள் ஒளிந்து கொள்கிறார்கள்...
அங்குதான் ஒரு மேகம்
பிச்சைத் தட்டை ஏந்தி நடந்து செல்கிறது...
ஊழலை மறைக்க
மேகங்கள் சரியான இடமென்று சொல்கிறார்கள்...
சற்று முன் வந்த செய்தி
விமானமொன்றை
அடர்ந்த மேகம் விழுங்கி விட்டதாம்....
ரேடாரின் கண்கள் தேடிக் கொண்டிருக்கின்றன.
- மு.முகமது பாட்சா*
13/05/2019
No comments:
Post a Comment