Monday, 6 November 2017

கவிதைகளையா? துணிகளையா?



கவிதைகளை உதறி 
காயப் போட்டுக் கொண்டிருந்தாள் 
மழை ஈரம் இன்னமும் காயவில்லை, 

தழையொடிக்கப் போன தகப்பனுக்காக 
காத்திருக்கின்றன ஆடுகள், 

விற்றுவிட்ட நிலத்திலிருந்த ஆலை 
பெரு மூச்சொன்றை 
விட்டுக் கொண்டிருந்தது, 

அடுப்பின் ஈரத்தில் வெந்து கொண்டிருந்தது 
அரை வயிற்றுக் கஞ்சி, 

ஏழைகளின் கனவுகளென்றுமே 
இரவுகளைத் துப்புவதில்லை, 

காயப் போட்டது 
கவிதைகளையா? துணிகளையா? 
என்று மட்டும் கேட்காதீர்கள் 

துயரங்களையும் 
கவிதைகளாகத்தான் பார்க்கிறது 
இந்தக் கவிதை. 

இங்குத் தேங்கி நிற்கும் கவிதையை 
கடந்து போய்விடுங்கள்... 
உங்களின் வெள்ளுடுப்புகள் 
உடனே அழுக்காகி விடலாம். 

  - மு. முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts