Saturday, 4 November 2017

வழிப் போக்கன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

பிம்பங்களில்
பிம்பங்கள் நுழைந்து வெளியேறுகின்றன

சுடரறுந்த விளக்கொன்று
பூசனையில்லாக் கோயிலில் ரசனையற்று கிடக்கிறது

ஓடாத நதியில் ஓடுகின்ற குதிரைகள்
நதியின் பாதையைத் தேடுவதேயில்லை

வேர்கள்
உதிர்ந்த இலைகளை உள்வாங்கிக் கொள்கின்றன

அகங்காரமென்பது
யாரோ துப்பிய எச்சில் கிரீடம்

சோதனைகளைத் தோளில் போட்டுத் திரிகிறான்
வழிப் போக்கன்

இரவும் பகலும்
யுகங்களைக் கணக்கிடுவதேயில்லை

இறந்த காலத்தின் எச்சங்கள்
நிகழ்காலத்தின் கூறுகளை எண்ணிக் கொண்டிருக்கின்றன

பார்வைகளின் மிச்சங்களை
நாம் விட்டுத்தான் வைத்திருக்கிறோம்

யாராவதொருவர்
நம் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

வாருங்கள் தேடித்தான் பார்ப்போம்
எந்தயிலையில் நம் பெயர் இருக்கிறதென்று.

 - மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts