
காட்சிப் பிழைகள் கடலென விரிகிறது
வேடமிட்ட வேடதாரிகள்
அகம்பிரமம் மந்திரம் ஓதுகிறார்கள்,
சர்வம் சம்பிராத்தியென்று
கொள்ளையடித்தவை கோபுரங்களாகி
அவர்களைத் தெய்வங்களாக்கின,
அஷ்ட பூசைகளும் ஒழுங்காக நடக்கின்றன,
கோபுரத்தின் சிதறல்களை
சிற்றெறும்புகள் பொறுக்கிக் கொண்டு
வாழ்க கோஷமிட்டு வலம் சுற்றி நடக்கின்றன,
நோவாவின் தோள்கள்
விறகுகளைச் சேகரிக்க....
நோவாவின் கப்பல் ஓட்டையென்று
தெய்வங்களின் வாக்கு அருளப்படுகிறது,
இந்தக் காலக்கிழவன்
கள்ளனென்றும் பக்தர்கள் கல்லெறிகிறார்கள்...
நோவாவின் விரல்களோ
கப்பலை மட்டுமே நெய்கின்றன....
அவன் காதுகளுக்கு மட்டுமே கேட்கிறது
ஒரு பிரளயத்தின் பெரும் வருகை.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment