
நான் பேச முடியாதென்று
யார் சொன்னது?
என் நாவினை அசைத்து
காற்றினைச் செலுத்தினால்
வார்த்தைகள் வந்து விழப் போகிறது,
அதைத்தானே
நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்,
என் காதுகளுக்கு
உங்களின் மொழி தேவைப் படவில்லை
அதனால்தான்
அதைச் சாத்தி வைத்திருக்கிறேன்,
காற்றின் மொழிகள் அதிகமானால்
கலவரங்கள் கூடிவிடுகிறது,
வார்த்தைகளை இரைத்துவிட்டு
நீங்கள் பொறுக்கிக் கொண்டிருப்பதை
நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,
மனதிற்குள் உட்கார்ந்திருக்கும் வார்த்தைகளை
வடி கட்டி என்னால் எழுதிவிட முடியும்
உதிர்த்துவிட்ட வார்த்தைகளை
உங்களால் திருத்தம் செய்ய முடியாது,
எரியும் வார்த்தைகளை
எப்படித்தான் நீங்கள் அணைக்கப் போகிறீர்கள்?
நான் ஊமையென்று சொல்வதால்
எனக்கொன்றும் கவலையில்லை....
என் காதுகளை
நான் சாத்தியே வைத்திருக்கிறேன்.
- மு. முகமது பாட்சா*
No comments:
Post a Comment