
மனப்பிறழ்வின் ஆழ்வெளியில்
உண்டான சலனம்
கொத்தாய்த்திரண்டது
துண்டானது கவனம்...
செவிடாகிப்போனது வானுலகம்...
ஊளையிட்டுக்
கொண்டிருக்கிறது தெருநாய்...
ஓடுமீன்ஓடி உறுமீன் வரும்போது
காத்திருந்த
கொக்கு தூங்கிவிட்டது...
முடிவுபரியந்தம்
நிலைத்திருக்கும் வழியை
ஆயத்தப்படுத்த முடியவில்லை...
நிர்பந்தப்படுத்தும்
வெற்றி தோல்விகளால்
விழி பிதுங்குகிறது....
அன்பு மெலிந்து
தவறுகளால் தடியாகி வடுவேறிய
இருத்தலின்
பொந்துகளில் மேலும் விரிசல்கள்...
மாயமானை விரட்டி ஓடும்
மாம்சமும் அதன் இச்சைகளும்
மரணத்தின் நிழலில்
தன்னைத்தானே
அறைந்துகொண்டது சிலுவையில்...
மானுட வாழ்வின் ஏடுகளில்
ரத்தம் ததும்பிக் கசிகிறது....
- கவிஞர் தஞ்சை தவசி
No comments:
Post a Comment