
மௌனம் மொழிப் பெயர்க்குமிடத்தில்
வரிசையாக நின்றிருந்தது கூட்டம்
பிறரின் மௌனங்களை
பைகளில் போட்டு எடுத்து வந்திருந்தார்கள்
சில பைகள்
நாற்றமெடுத்து ஒழுகிக் கொண்டிருந்தன
சில பைகள்
வேத மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தன
சில பைகள்
கசப்புகளைக் கலவையாக வைத்திருந்தது
சில பைகள்
எரிந்து கொண்டிருந்தது
அவர்களுக்கே தெரியவில்லை
சில பைகளில்
இரத்தக் கவிச்சி வீசிக் கொண்டிருக்க
சில பைகள்
காதலை மறைத்து வைத்திருந்தது
சில பைகளில்
மௌனமான மௌனம் உட்கார்ந்திருக்க
மொழி பெயர்ப்பாளன் இறந்து கிடந்தான்
அவன் மௌனமாக ஏன் போனானென்று
ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது
மௌனங்களும் பொல்லாத ஆயுதங்களென்று
மருத்துவக் குறிப்பில் ஏனோ எழுதவில்லை
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment