Wednesday, 8 November 2017

எரிந்துவிடும் கவிதை

different thoughts modern art க்கான பட முடிவு

தாவிக் கொண்டிருந்த மனம்
பிடித்திருந்த கிளை முறிந்து விழுகிறது,
சலனமற்ற காற்றில் மிதக்கும் பறவைகள்
சஞ்சலத்தைக் கழற்றி விடுகின்றன
மௌனம் சூழ் வெளியில் 
மயானம் அமைதி பூத்துக் கிடக்கிறது,
தேடல்களின் மிச்சங்கள்
பூமியெங்கும் இரைந்து கிடக்கின்றன,
ஜனனம் போல் மரணமும்
மரணம் போல் ஜனனமும் 
மாயன் நுழைத்த பதுமைகளாக...
நான் நீ சொற்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன,
நழுவிக் கிடக்கும் பூமியின் கோபம்
கடலுக்கடியில் பெருமூச்சு விடுகிறது...
அத்துணைப் பேரும் உள்ளமர்ந்துக் கொள்ள
ஆறடியிடத்தை இன்னமும் 
ஆழமாக அகலமாக அகழ்கிறார்கள்
பகலின் நிழல்தான் 
இரவென்று சொல்லிவிட்டுப் போகும் நாடோடியை
எல்லோரும் ஏளனமாகப் பார்க்க...
தட்டையான மனிதர்களிடம்
உலகம் உருண்டையென்று சொல்வதில்
என்ன நியாயம் இருக்கப் போகிறது?
இந்தக் கவிதையைப் படித்ததும் புதைத்துவிடுங்கள்
இல்லையென்றாலும்
சற்று நேரத்தில் இது எரிந்துவிடும்.

- மு. முகமது பாட்சா




No comments:

Post a Comment

Popular Posts