Saturday, 11 November 2017

பார்வைகள்

different view in poem bird painting க்கான பட முடிவு

மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது 
அந்தக் கவிதையின் வரிகள் 
கயிறென்று நினைத்த சிலர் 
அதனை வடமாக்கியிழுக்கிறார்கள் 
மாயத் தேரொன்று 
அசைந்தசைந்து நகர்கிறது 
சிதைந்து வீழ்ந்த வரிகள் மிதிப் படுகின்றன 
சில வரிகளை 
சிலர் கடவுளாக்கி வழி படுகிறார்கள் 
கவிதையின் தாள் 
இப்போது வெள்ளை மௌனம் பூக்கிறது 
விதவையென்று 
ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான் 
மல்லிகையென்றவன் மனைவிக்குச் சூடுகிறான் 
புத்தனின் ஆடையென்று 
பிட்சுகள் எடுத்துச் செல்கிறார்கள் 
அரசியல்வாதியொருவன் 
அங்கவஸ்திரமாக்கிக் கொள்கிறான் 
பார்வையிழந்தவனை மட்டும் 
அது பார்க்காமலேயே கிடக்கிறது 
இரைந்து கிடந்த பார்வைகளெல்லாம் 
சிறகுகளை வரைந்து பறக்க விடுகின்றன 
ஆரிகாமியாய் பறக்கும் அந்தப் பறவை 
உங்களின் பார்வைகளில் தென்பட்டால் 
அதனை வாசித்துப் பாருங்கள் 
அது சொல்ல வந்த சேதி 
இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. 

 - மு. முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts