Monday, 13 November 2017

நாடோடியின் பாடல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை மற்றும் வெளிப்புறம்

நாடோடியின் பாடலொன்றை 
கடந்து போகிறேன், 
நாற்புறமும் தம்புராவின் இசை 
ஒளித்துக் கொண்டிருக்கிறது, 

தெய்வம் 
தன் மனதிற்குள் உட்கார்ந்திருப்பதாய் 
பாடலை இசைக்கிறான், 

ஆலயமணியோசையால் 
சிறகடித்தமர்கின்றன புறாக்கள், 
வேண்டுதல் தீனி இரைந்து கிடக்கிறது, 

பிச்சைக்காரர்கள் பக்தர்களை 
கையெடுத்துக் கும்பிடுகிறார்கள், 

பிரார்த்தனையினூடே 
வெளியிலிட்ட செருப்புகள் 
மனதில் வந்து உட்கார்ந்து கொள்கிறது, 

கடவுளிடம் கை நிறையக் கேட்டவன் 
யாசகனிடம் கைவிரித்துப் போகிறான், 
நாத்திகனொருவன் தட்டிலிட்டதால் 
கடவுளாகிப் போனான், 

கூட்டத்தைக் கட்டுப்படுத்த 
காவலர்கள் நிற்கிறார்கள், 
களவு போன பணத்திற்காகக் 
கடவுளை நிந்திக்கிறான் ஒருவன். 

காகமொன்று 
சிறகுலர்த்தித் தலை சாய்த்துப் பார்க்கிறது, 
வேர்க்கடலையைப் போடுகிறாள் 
குட்டிச் செல்லம்மா ... 

.பறந்து கவ்வும் காகம் 
பிரார்த்தனைகளை அறியாது. 

நாடோடியின் பாடலொன்றை 
கடந்து போகிறேன், 
நாற்புறமும் தம்புராவின் இசை 
ஒளித்துக் கொண்டேயிருக்கிறது,

-மு..முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts