
எனக்கான கனவுகளை
புதைத்து விட்டு எழுந்தேன்,
அங்கே
கிளைகள் பரப்பிய மரமொன்று
எழுந்திருந்தது !
அதில் பலவித பறவைகள்
கூடுகட்டி குஞ்சுகள் பொறித்திருந்தன !
அதன் பழங்கள் ருசியானதென்று
குரங்கொன்று
சொல்லிவிட்டுத் தாவி யோடியது,
அதன் கீழ் விரிக்கப் பட்ட
பச்சை போர்வையில்
இச்சையோடு ஜோடி யிருவர்
காதல் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்க,
வேடனொருவன்
இவர்களை வேட்டையாடிவிட்டுப் போகிறான்,
சிந்திக் கிடந்த இரத்த சங்கமத்தில்
கெளரவம் என்ற வார்த்தை
சிதறிக் கிடந்தது !
மரங்கொத்தியொன்று
துளையிட்டுக் கொண்டிருந்தது
கள்ள நாகமொன்று குடியேறுவதற்காக,
பறவைகளெல்லாம் கனவுகளை
கிளைகளில் வைத்துவிட்டு
இடம் மாறிக் கொண்டன !
இப்போதெல்லாம் இதன் பழங்களில்
இரத்தவாடை வீசுவதாகச் சொல்லி
குரங்குகள் வருவதேயில்லை ,
கனவுகளைப் புதைத்த இடத்தில்தான்
எனக்கும் குழி வெட்டிக் கொண்டிருந்தார்கள்,
நானும் இறந்து விட்டதாகச் சொல்லி !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment