
மோடி வித்தைக்காரரின் கையில்
மாங்காய்ச் செடியொன்றிருந்தது
கூடையில் வைத்து மூடித் திறந்தார்
பழம் விளைத்திருந்தது !
பழத்தை நறுக்கிக் கொடுத்தார்
சுவை குறைவுதான் என்றாலும்
மசிக்குப் பயந்து
நன்றாக இருக்கிறது என்றோம்,
செத்தது போல் படுத்திருந்தவனை
மந்திரக் கோலால் எழுப்பிய போது
வித்தைக்காரர் என்றுதான்
வியந்து போனோம் !
அதிர்ஷ்ட தாயத்தை
கைகளில் கட்டினால்
அஷ்டலக்ஷ்மியும் அடக்கமென்றார்
அதையும் வாங்கி
கைகளில் கட்டிக் கொண்டோம்
ஊதிவிட்ட விபூதிக்காக
கண்ணை மூடித் திறந்தபோது
வித்தைக்காரர் விளையாடிவிட்டார்,
பைகளில் வைத்திருந்த
பணத்தையெல்லாம் பறி கொடுத்துவிட்டு
அம்போ! என்றே தேடுகின்றோம்,
அவர் வேறெங்கேயோ
வித்தையைக் காட்ட போய் விட்டார் !
- நட்புடன்.....முகமது பாட்சா*
09/11/2016
No comments:
Post a Comment