
"என்னம்மா...?" என்ற அப்பாவிடம்,
விடுதலை வாங்கி
வந்துவிட்டதாகச் சொன்னாள்,
"ஏன்டீ ,இப்படி...!" என்ற அம்மாவிடம்,
'நான், நீயல்லம்மா..' என்றாள்,
"இனி என்ன செய்யப் போகிறாய்?"
என்ற அண்ணனிடம்
படிப்பை பிடித்து
நடக்கப் போவதாகச் சொன்னாள்,
"ஏங்க்கா...!' என்ற தங்கையிடம்,
சுய சோகம் தொக்கியிருந்தது,
அவளின் திருமணக் கனவில்
கல்லெறிந்தவளாய்
அக்காவை நிமிர்ந்து பார்த்தாள்....
ஆனாலும்
யாரும் அவளிடம் கேட்கவேயில்லை,
'உன் கணவன் திருந்தவில்லையா?'......... என்று
'அவன் உன்னை அடித்தானா?!'................... என்று
'கோப்பைக்குள் இன்னமும்
விழுந்துதான் கிடக்கிறானா?' .......................என்று
அவள் மட்டும் ஏன் கவலைப் பட வேண்டும்,
இவர்களைப் பற்றியெல்லாம்!
- மு.முகமது பாட்சா
02/04/2017
No comments:
Post a Comment