
சுயமிழந்த வார்த்தைகளை
ஆடைகளாக உடுத்திக் கொண்டிருந்தோம்,
கேவலமான பார்வைகளை
எங்களின் முகங்களில் எழுதிவிட்டுச் சென்றார்கள்,
நடக்கும் பாதைகளில் முற்களைப் பரப்பிவிட்டு
ரத்தினக் கம்பளமென்று
பச்சையாகத்தான் பொய் சொன்னார்கள்...
எங்களின் இரவுகளை
அவர்கள் உறங்கவிட்டதே கிடையாது,
பகலில் நாங்கள்தான்
அவர்களுக்குப் பச்சை குதிரை விளையாட்டு...
இவைதான் சாமிகளென்றார்கள்
கும்பிடப் போனால்
தூர நில்லு நீங்களெல்லாம் தீட்டு என்றார்கள்,
கேடுகெட்ட அவர்களையெல்லாம்
தங்களைச் சாமியென்றே கூப்பிட வைத்தார்கள்..
அவர்கள் சொன்ன
கடவுள்களின் பெயர்களைத்தான்
நாங்களும் எங்களுக்கு வைத்துக் கொண்டோம்....
அவர்கள் என்றுமே
கடவுள்களைத் தீட்டென்று சொன்னதே கிடையாது...
தமிழில் பெயர்கள் வைக்கத் தொடங்கினோம்,
ஆச்சரியமாகப் பார்த்தார்கள்...
அறிவுத் தளத்தில் நுழைந்து வந்தோம்
அச்சத்துடன் பார்த்தார்கள்...
உரிமைகளைக் கேட்டு வரும்போதுதான்
தேசத் துரோகிகளென்று முத்திரை குத்தினார்கள்,
இப்போதும் அவர்களின் புலம்பல் நிற்கவில்லை
இறந்து போன ஈரோட்டுக் கிழவன்தான்
எங்களையெல்லாம் கெடுத்துவிட்டதாகச் சொல்லி
புலம்பிக் கொண்டே திரிகிறார்கள் !
- மு.முகமதுபாட்சா
13/04/2017
No comments:
Post a Comment