
முகன்
உன் முகத்தின் பிரதியை
ஏற்கனவே பார்த்திருக்கிறேன்
உம்முகனாய் இருப்பதால்
உன் பின்னால்
போதிமரம் வளர்ந்துவிடுமா?
அழுமுகனாகவும் அடிக்கடி
என்னிடம் புலம்பியிருக்கிறாய்...
ஆனாலும் அவ்வப்போது
குரைமுகனாக மாறிவிடுகிறாய்..
களிமுகம் ஒன்றை
எப்போதாவது அணிந்திருக்கிறாயா?
சிடுமுகம் உன்னோடுவே
ஒட்டிக் கொண்டிருக்கிறது...
தெளிமுகனாய் இதுவரை உன்னை
யாரும் பார்த்ததேயில்லை
பரிமுகனாய் எப்போதும்
ஓடிக்கொண்டேதான் இருக்கிறாய்..
சுளிமுகம்
புன்னகையைச் சாப்பிட்டு விடுகிறது
ஒளிமுகனென்று
யாரவது சொன்னால் நம்பிவிடாதே
குறைமுகன் என்பதை
கண்ணாடிதான் அடையாளம் செய்கிறதே
நரிமுகனாய் மாறுவதற்கேன்
முயற்சிக்கிறாய்...
புதைமுகமல்லவா நம் முகமூடி
இரு! கழற்றி வைத்த முகத்தை
மாட்டிக் கொள்கிறேன்
யாரோ வருகிறார்கள்....
- மு.முகமது பாட்சா*
10/04/2018
No comments:
Post a Comment