
வருமான வரித்துறையினர்
சூழ்ந்து கொண்டனர் கவிதைகளை,
காசை பற்றி
எழுதாத கவிதைகளென்றாலும்,
காதலைப் பற்றி எழுதியிருப்பதாக
குற்றம் சாட்டினார்கள் !
அதற்கும்
வருமான வரித் துறைக்கும் என்ன சம்பந்தம்?
ஏழைகளுக்கான கவிதைகளெல்லாம்
தேசத்தின்
துரோகத்திற்கான கவிதைகளென
குற்றப் பதிவு புனையப்பட்டது...
அதற்கும்
வருமான வரித் துறைக்கும் என்ன சம்பந்தம்?
ஓடாத நதிகளுக்காகவும்
ஒப்பாரி வைத்ததாம் கவிதைகள் ...
ஆளும் அரசாங்கத்திற்கு
அநியாயம் இழைத்ததாம் கவிதைகள்...
அதற்கும்
வருமான வரித் துறைக்கும் என்ன சம்பந்தம்?
கைது செய்வதற்கு
துறைகளேதும் முக்கியமில்லையென்று
பின் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது!
-
- மு.முகமது பாட்சா*
07/04/2017
No comments:
Post a Comment