Tuesday, 17 April 2018

ஒற்றை இறகு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

காற்றில் மிதந்து வந்த இறகு
சன்னலின் கதவில் ஒட்டிக் கொண்டது
தோற்றப்பிழையெனக் கண்ணாடியை 
துடைத்து மாட்டுகிறேன்
புறாவொன்றின் கதறல் செவ்வானத்தை நகர்த்த
கடலில் மூழ்குகின்ற சூரியன்
கண்ணீரை  மறைத்துக் கொள்கிறான்
'சபிக்கப்பட்ட ஆயுதங்கள் 
இங்குச் சமாதானம் பேசுகின்றன...'
தொக்கி நிற்கிறது அந்தக் கவிதையின் வரி
சன்னலைத் திறந்து வைக்கிறேன்
உள்ளே நுழைந்த இறகு
கவிதையின் வரிகளில் ஒட்டிக் கொள்கிறது
தேநீர் குவளையில்
கழுகின் படம் சூடாகப் பறக்க
இதழின் சூட்டை இலேசாகத் தணித்து 
கவிதையை தொடர்கிறேன்
போதிமரம் குறுகி போன்சாயாக மாற
புத்தனின் கால்வழித் தடங்கள்
கடல் மணலில் புதைந்து கிடக்கிறது...
மதங்களை விற்றுக் கொண்டிருந்தவர்கள்
இலவசமாக 
உயிர்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்
இறகையெடுத்து 
இப்போது பூந்தொட்டியில் வைக்கிறேன்
அழகு என்பதும் பெரும் வலிதானென்று
அந்தக் கவிதை 
தன்னை முடித்துக் கொண்டிருந்தது.

- மு.முகமது பாட்சா*
17 /04 /2018




No comments:

Post a Comment

Popular Posts