Saturday, 14 April 2018

நானும் நாடோடி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

என் விரல்களையெடுத்து
நீயெழுதும் கவிதையை இரசிக்கிறேன்
காற்றின் சிறகுகளில் ஒட்டிக் கொள்ளும் 
மகரந்த துகள்கள்
மொழியறியாக் கூட்டிற்குள்
எழுத்துகளை கடத்திச் செல்கின்றன
துளி நீரருந்தும் காகம்
இயைபுக்குள் நுழைந்து கொள்ள
அருகாமையின் வாசம் 
வானத்தை பரத்துகிறது பரவசத்திற்குள்
வேடனின் குறியெய்யா அம்புகள்
குடுவைக்குள் உறக்கம் தொலைக்கின்றன
வில்லின் நாணெடுத்து இசையை மீட்டுகிறேன்
வேடனை மான்கள் வேட்டையாடுகின்றன
அரூப அசரீரிகள் ஒன்றிணைந்து
அறைகிறது என் பெரும் வனத்தை
நீயும் நானும் எளிதில் பற்றிக் கொள்கிறோம்...
காகம் பசியாற 
அலகுகளை தீட்டிக் கொள்கிறது
எழுதிய விரல்களில் முத்தமொன்று 
முற்றுப் புள்ளி வைக்க
முடியாத கவிதையை அணைத்துக் கொள்கிறாய்
முகவரியே!
நானும் கூட ஒரு வழிப் போக்கன்தான்
வார்த்தைகளை இன்னமும் தேடி அலைகிறேன்.

- மு.முகமது பாட்சா*
15 /04 /2018

No comments:

Post a Comment

Popular Posts