
வறண்ட நதியில் வாய்க்கால்
வெட்டச் சொல்கிறார் விஞ்ஞானி
கரையோரங்களில் கட்டிடம் எழுப்ப
மணலெடுத்தால் திருட்டில்லையா?
மழை இங்குதான் அதிகம் பெய்கிறதாம்
அண்டாவில் பிடித்து
விவசாயம் செய்வோம் வாருங்கள்,
தறுதலைக்கு
மீனென்றும் கறியென்றும் எழுதிக் கொடுங்கள்
சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடட்டும்,
காஞ்ச வயிறுகளைப் பார்த்து அமைதியாக
கண்ணீரைக் குடியுங்கள் என்கிறாய்...
முதலில் மேடைகளை உடைத்தெறியுங்கள்
வீதியில் நின்று பேசட்டும்
தமிழகம் என்ன கூத்து மேடையா?
ஓய்வெடுத்தவர்கள் வந்து நடிப்பதற்கு..
நீ பிடுங்கிய புற்களை எடுத்துக் காட்டு
எத்தனை நெற்கள்
விளைந்திருக்கிறதென்று எண்ணிப் பார்க்கிறோம்...
காவியின் கொடி போர்த்தி பெரியாரின்
கைத்தடியில் காங்கிரஸ்
கொடி பிடிக்க உனக்கு மட்டுமே தெரிகிறது
நறுக்கென்று குறள் பேசியவர்களுக்கு
வழவழத் தமிழில்
வாழைப்பழம் சொருகுவது பிடிக்காது...
காசு கொடுத்து
காட்சி பார்ப்பவர்களின் கைதட்டல்கள்
மேடையோடு மட்டும்தான்
இனி திரைக்கதை வசனம் நாங்கள்தான்.
- மு.முகமது பாட்சா*
06/04/2018
No comments:
Post a Comment